அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை சீரமைக்கவும், தாணியங்கி மயமாக்களை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பணிநீக்க அறிவிப்புகள் இந்த வாரமே மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பணிநீக்கங்கள் அமேசான் நிறுவனத்தின் 3 லட்சத்து 50ஆயிரம் கார்ப்பரேட் ஊழியர்களில் கிட்டத்தட்ட 10% பேரை பாதிக்கும். இருப்பினும் அமேசான் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையான 1.55 மில்லியனில் இது ஒரு சிறிய பகுதியே ஆகும்.
அமேசான் வெப் சர்வீஸ் செயல்பாடுகள் சாதனங்கள் சேவைகள் மற்றும் மனித வளங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த பணிநீக்கங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பிஎடி(PXT) People experience and Technology பிரிவில் மட்டும் 15% ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிக வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு இதுவரை 216 தொழில்நுட்ப நிறுவனங்கள் 98344 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
இன்டெல், மைக்ரோசாப்ட் மற்றும் டிசிஎஸ் (Intel, Microsoft and TCS) ஆகியவை பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து முன்னணியில் இருந்தன .இப்போது அமேசான் 30,000-க்கும் மேற்பட்ட பணிநீக்கங்களை அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய ஈகாமர்ஸ்(E-commerce) நிறுவனமாக அமேசான் இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27000-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தது. அதுவே அமேசானின் அதிக அளவிலான பணிநீக்கமாக இருந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் 30ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற கடுமையான விதியை அமல்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஊழியர்கள் தாமாக முன்வந்து வேலையை விட்டு செல்லவில்லை. இதனால் நிர்வாகம் கட்டாயமாக பணிநீக்கம் நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த அலுவலக விதிக்கு இணங்காத ஊழியர்கள் எந்தவிதமான பணிநீக்க சலுகையும் இன்றி தானாக முன்வந்து வேலையை விட்டு சென்றதாக கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமேசானின் கார்ப்பரேட் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது. என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயந்திர கற்றல் கருவிகள் மூலம் வழக்கமான மற்றும் பின்னணி பணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பணிநீக்கங்கள் நடந்தாலும் அமேசானின் பங்கு சந்தை மதிப்பு நிலையாக உள்ளது. செயல் திறன் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்துவதை பங்கு சந்தை பாராட்டுவதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் இந்த பண்டிகை காலத்திலும், நல்ல வரவேற்பை எதிர்பார்க்கிறது. அதற்காக அதிக தேவையை சமாளிக்க 2 லட்சத்து 50ஆயிரம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. Amazமon நிறுவனத்தின் இந்த பெரிய அளவிலான பணிநீக்கங்கள் மைக்ரோசாப்ட், மெட்டா கூகுள்
மற்றும் இன்டெல் போன்ற பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நடக்கும் ஒரு பொதுவான போக்கை காட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகமாக ஆட்களை எடுத்ததும், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence)மூலம் உற்பத்தி திறன் அதிகரித்ததும் இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.






