
பல சவால்களை கடந்து வந்திருக்கிறேன் என்று நடிகர் அஜித்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: “முதலில் எனக்கு தமிழ் சரியாக பேச முடியவில்லை. எனக்கு உச்சரிப்பில் வித்தியாசம் இருந்தது. ஆனால் அதை சரி செய்வதற்காக நான் கடுமையாக உழைத்தேன். என் பெயர் பொதுவாக பிரபலமான பெயர் அல்ல என்பதால், சிலர் அதை மாற்றச் சொல்லினர். ஆனால் நான் உறுதியாகச் சொன்னேன் — எனக்கு வேறு பெயர் வேண்டாம்.
அஜித்தின் வளர்ச்சி என்பது ஒரே நாளில் கிடைத்த புகழோ, பெரிய ஆதரவோ அல்ல. அது கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான். பல சவால்கள் இருந்தன, ஆனால் அனைத்தையும் நான் தாண்டி வந்தேன். இன்றும் ரேஸிங்கில் நான் ஒரு 19 வயது இளைஞன் போல் உழைக்கிறேன்.
திரைப்படத்திலும் பந்தயத்திலும் ஒரே நெறிதான் — சரியான குழுவை அமைக்க வேண்டும். அதில் நான் அதிர்ஷ்டசாலி. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்தியாவில் F1 பாணியில் ஒரு படம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு — எந்த விதத்திலும் இந்த விளையாட்டை (மோட்டார் ரேஸிங்) பிரபலப்படுத்த முடிந்தால் அதுவே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.”
மேலும் அவர் கூறியதாவது:”அறிவு மற்றும் விழிப்புணர்வுதான் ரேஸிங்கின் அடிப்படை. விபத்து ஏற்பட்டால் முதலில் நான் காயமடைந்தேனா என்று பார்ப்பேன். அதையும் தாண்டி, காரின் நிலைமை என்ன, மீண்டும் இந்த ரேஸை தொடங்க முடியுமா என்பதே என் கவனம் இருக்கும்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்யூரோப்பியன் கப் போட்டிகளில் என் கார் பலமுறை புரண்டது. அதை இன்னும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று உறுதிசெய்த பிறகு தான் என் அட்ரினலின் அதிகரிக்கத் தொடங்கும். அப்போது என் மனதில் ஒரே எண்ணம் தான் இருக்கும் — ‘இன்று இந்த ரேஸை நான் முடிக்கணும்’.
எனக்கு ஒரே பயம் — விபத்து நேர்ந்தால் என் குடும்பத்தார் கவலைப்படுவார்கள். அவர்களுக்கு இது பெரும் மன அழுத்தத்தை தரும். சில கடுமையான விபத்துகள் ஏற்பட்டாலும், அது மற்றவர்களுக்கும் நடந்ததே. ஆனால் நான் நடிகர் என்பதால் அது பெரிய செய்தியாக மாறுகிறது.
பந்தயத்தில் விலக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஒருபோதும் தோன்றவில்லை. இதுவரை எனக்கான காயங்கள் ஒரு பயிற்சி அல்லது ஒரு போட்டியை தவறவிடும் அளவுக்கு மோசமாக இருக்கவில்லை. ஆனால் சினிமா துறையில் மட்டும் நான் 29 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளேன்!”
அவர் மேலும் கூறினார்:”வாழ்க்கையை இரண்டு வழிகளில் வாழலாம் — குறை கூறிக்கொண்டு அல்லது பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிக் கொண்டு. பொருளாதார ரீதியில் உறுதியாக இருக்கும் போது தான் பணத்தால் எதை வாங்க முடியும், எதை முடியாது என்பதைக் புரிந்து கொள்வோம். நீ தருபவரா, பெறுபவரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செல்வம் உன்னை ஒருநாள் அடிமையாக்க கூடும்.”
அவர் வெற்றி குறித்தும் கூறியதாவது:”வெற்றி என்பது ஒரு காட்டுக்குதிரை போன்றது. யாரும் அதில் ஏறலாம்; ஆனால் அதை அடக்க முடியாவிட்டால் அது உன்னை தள்ளிவிட்டு அடுத்தவனை ஏற்றிக்கொள்ளும்.”
அடுத்த படத்துக்கான அறிவிப்பு குறித்து அவர் கூறினார்: “அக்டோபர் முதல் மார்ச் வரை எனக்கு ரேஸிங் சீசன் இருக்கும். அதனால் அந்த காலத்தில் படப்பிடிப்பில் ஈடுபட மாட்டேன். புதிய படம் இன்னும் சில மாதங்களில் தொடங்கும். அடுத்த ஆண்டு ஜனவரியில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.”
ஏற்கனவே “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்குமார் மீண்டும் இணைந்து AK64 என்ற புதிய படத்தில் நடிக்கிறார் என்பதும் உறுதியானது. அந்த படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவில், பல வருடங்களாக தன்னுடன் உறுதுணையாக இருந்து வரும் தனது மனைவி ஷாலினி குறித்து பெருமையாக பேசியுள்ளார்






