
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தனியார் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித்குமார்,
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பொறுப்பு ஒரே நபருக்கே எனச் சொல்ல முடியாது. நானும் உட்பட, அனைவருக்கும் அதற்குப் பொறுப்பு உண்டு,”
என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “ஒரு பெரிய கூட்டத்தை திரட்டிக் காட்டி நாம் யார் என்பதை நிரூபிக்கக் கூடிய சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். ‘கூட்டம் கூட்டுவது பெருமை’ என்கிற இந்த அதீத மனநிலை முடிவுக்கு வர வேண்டும்,”
என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அதோடு, “கிரிக்கெட் போட்டிகளுக்குச் செல்லும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதில்லை. ஆனால் திரையரங்குகளிலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் மட்டுமே ஏன் இத்தகைய விபத்துகள் நடக்கின்றன?” என்ற கேள்வியையும் அஜித்குமார் எழுப்பினார்.
ரசிகர்களின் அன்பை மட்டுமே தாம் விரும்புவதாகவும், அதற்காகவே கடினமாக உழைப்பதாகவும் கூறிய அஜித்குமார்,
“ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. உயிர் முக்கியம்; அதை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம்,” என்றும் கேட்டுக்கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகர் அஜித்குமார் கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






