Home இந்தியா 25 உயிர்களை பலிகொண்ட பேருந்து தீவிபத்து – என்ன நடந்தது அந்த இரவில்?

25 உயிர்களை பலிகொண்ட பேருந்து தீவிபத்து – என்ன நடந்தது அந்த இரவில்?

1
0

நேற்று இரவு 9 மணி 40 நிமிட அளவில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரை நோக்கி பயணித்த தனியார் சொகுசு ஸ்லீப்பர் பேருந்து — காவேரி டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

அந்த பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்தனர். இதில் ஒரு ஓட்டுநர், ஒரு நடத்துநர் மற்றும் 41 பயணிகள் இருந்தனர்.

பேருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் பெங்களூரை நோக்கி வந்தபோது, கர்னூல் அருகே உள்ள “உளிந்தகொண்டா” என்ற இடத்தில் சாலையோரமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி — குறிப்பாக ஓட்டுநரின் இடது புற தானியங்கி ஏறும் கதவு பகுதி — கடுமையாக சேதமடைந்தது. இதனால் அந்த கதவை உடனடியாக திறக்க முடியவில்லை.

மோதியதையடுத்து பேருந்து சுமார் 300 மீட்டர் தூரம் சென்ற பிறகே நின்றது. அதற்குள் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் இருந்து தீப்பொறி பரவி பேருந்தில் தீ பற்றியது. ஆரம்பத்தில் சிறிய தீப்பொறியாக இருந்தது, ஆனால் சில நொடிகளில் முழு பேருந்தையும் தீ சூழ்ந்தது.

ஓட்டுநர் தன்னிடம் இருந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்த சிலர் உடனே கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயன்றனர். சிலர் வெளியே வந்தாலும், பலர் உள்ளே சிக்கி உயிரிழந்தனர். பேருந்து முழுவதும் ஏர் கண்டிஷன் வசதியுடன் மூடப்பட்டிருந்ததால், புகை மற்றும் தீ வெப்பத்தால் பயணிகள் தப்பிக்க முடியவில்லை.

தானியங்கி கதவு செயலிழந்ததால், ஓட்டுநராலும் அதை திறக்க முடியவில்லை. இதனால் சுமார் 20 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். இன்னும் ஐந்து பேரின் நிலைமை குறித்து தெளிவான தகவல் இதுவரை கிடைக்கவில்லை; அவர்களை அடையாளம் காண்பது கடினமாகியுள்ளது.

கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரந்த் பாட்டில் தலைமையில் காவல்துறை, தீயணைப்பு, மருத்துவப் பிரிவினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் பிரேத பரிசோதனை பணிகளை மேற்கொண்டனர்.

பேருந்தின் ஆவணங்கள், பராமரிப்பு பதிவுகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தகவலின்படி, பேருந்து நிறுவனத்தால் சில ஆவணங்கள் சரியாக புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பேருந்தின் தயாரிப்பு நிறுவனத்தின் குறைபாடுகள் இதுவரை கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பராமரிப்பு குறைபாடு இருக்கலாம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்து புறப்படும் முன், அது சரியான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 44-ல் மிதமான போக்குவரத்து நிலை இருந்தபோதிலும், பேருந்து சுமார் 100 கி.மீ வேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளை 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றபோது தீப்பொறி பரவி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு முயற்சிகள் நடந்தபோதும், பெரும்பாலான பயணிகளை காப்பாற்ற முடியவில்லை.

மொத்தம் 43 பேருடன் ஹைதராபாத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட அந்த பேருந்து இன்று காலை 6 மணிக்கு பெங்களூரை அடைய வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அவரவர் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரந்த் பாட்டில் தலைமையிலான குழு இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here