நம்ம வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கோ அல்லது லாக்கரில் இருக்கும் பொருள்களுக்கோ நமக்குப் பிறகு யாருக்கு உரிமை கிடைக்கணும்னு ஒரே ஒருவரை நாமினியாக நியமிக்கணும் என்ற நடைமுறையில் பல சிக்கல்கள் இருந்தன அல்லவா? ஒருவேளை அந்த நாமினிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பலரும் யோசித்திருக்கலாம்.
இனி அந்தக் கவலை தேவையில்லை. நம்ம வசதிக்காக மத்திய அரசு ஒரு சூப்பரான புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அது வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இனிமேல் நம்ம வங்கி கணக்குகளுக்கு ஒரே ஒருவரை மட்டும் அல்ல, நான்கு பேர் வரை நாமினியாக நியமிக்க முடியும்.
இந்த புதிய விதி நம்ம சேவிங்ஸ் அக்கவுண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகள், வங்கி லாக்கரில் வச்சிருக்கும் நகைகள், பத்திரங்கள், மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
இதில் இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் விஷயம்: உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்துக்கு நீங்கள் நாலு பேரை நாமினியாக நியமிக்கலாம். அதோடு, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு கிடைக்கணும்னு நீங்களே தீர்மானிக்கலாம்.
உதாரணமாக –முதல் நபருக்கு 50%,இரண்டாவது நபருக்கு 25% மற்ற இரண்டு பேருக்கும் தலா 12.5% என்று பிரிக்கலாம். மொத்தம் 100% ஆக சரியாக இருக்க வேண்டும்.இதனால், நமக்குப் பிறகு பணத்தைப் பெறும் முறையில் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக செயல்பட முடியும்.
இரண்டாவது விஷயம்: ஆனால், வங்கி லாக்கரிலோ அல்லது பாதுகாப்பில் வைத்திருக்கும் பொருட்களுக்கோ அடுத்தடுத்த முறையில் நாமினிகளை நியமிக்க முடியும். அதாவது, முதல் நாமினிக்கு ஏதாவது ஆனால்தான் இரண்டாவது நாமினிக்கு உரிமை போகும். அதேபோல் அவருக்கு ஏதாவது ஆனால்தான் மூன்றாவது நபருக்கு உரிமை கிடைக்கும். இதனால் ஒரு தெளிவான வாரிசுரிமைச் சீர்முறை உருவாகிறது.
சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வங்கி சட்டத் திருத்தத்தின் கீழ் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கான நடைமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.
இந்த புதிய விதிமுறையால் நாமினிகளுக்கு பணம் அல்லது பொருட்கள் கிடைக்கும் நடைமுறை மிகச் சுலபமாகும். வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். தேவையில்லாத குடும்ப சண்டைகள், சட்டச் சிக்கல்கள் அனைத்தும் பெருமளவில் குறையும்.
மொத்தத்தில், இது வாடிக்கையாளர்களான நமக்கு மிகவும் பயனுள்ள மாற்றமாகும். இனி நம்ம சொத்துகளை யாருக்கு எப்படி பிரித்து கொடுக்கணும்னு தெளிவாக திட்டமிடலாம்.






