குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
தலையில் இருமுடி கட்டி, கருப்பு உடை அணிந்து, வழக்கம்போல் பக்தர்கள் போல் 18 படிகளை ஏறி ஐயப்பனை தரிசித்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டரில் நிலக்கல் வந்தார். அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் பம்பைக்கு வந்து, பின்னர் இருமுடியுடன் மேலே ஏறி சபரிமலை சன்னிதானத்தை சென்றடைந்தார்.
சபரிமலையில் 18 படிகளை ஏறி செல்லும் பக்தர்கள் அனைவரும் இருமுடி சுமப்பது தேவஸ்தானத்தின் முக்கிய விதிகளில் ஒன்றாகும். அதன்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும் இருமுடியுடன் ஏறிச் சென்றார். அவருடன் பாதுகாப்பு படை அதிகாரிகளும் இருமுடி சுமந்து ஏறி வழிபாடு செய்தனர்.
இது சபரிமலை வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு குடியரசுத் தலைவர் இருமுடி சுமந்து சாமி தரிசனம் செய்வது முதல்முறை என்பதால் வரலாற்றுப் பெருமை வாய்ந்த நிகழ்வாகும்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் சபரிமலை சன்னிதானத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொதுமக்கள் பக்தர்களுக்கு இன்று காலை முதல் மாலை வரை தரிசன அனுமதி வழங்கப்படவில்லை. மாலை நேரத்திலிருந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
சன்னிதானத்தை சுற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (சுமார் 10 பேர்) பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தேவஸ்தானம் போர்டு நிர்வாகிகள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
மலைமேல் சென்ற குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தேவஸ்தானம் போர்டு சார்பில் பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. 18-ஆம் படிக்கு கீழே உள்ள தேங்காய் உடைக்கும் இடத்தில் பூஜை செய்த பிறகு, இருமுடி சுமந்தபடி 18 படிகளை ஏறி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இன்று முழு நாளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பம்பை முதல் சன்னிதானம் வரை வனப்பகுதிகளில் பல பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சபரிமலை தரிசனத்தை முடித்த பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை திருவனந்தபுரத்துக்கு திரும்பி ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். நாளையும் நாளை மறுநாளும் கேரளாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.






