
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பாஸல்வா காலனியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ராகுல் பார்தி தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் ஃபரிதாபாத்தில் உள்ள டி.ஏவி கல்லூரியில் வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
ராகுல் கடந்த இரண்டு வாரங்களாக சரியாக சாப்பிடாமல் குடும்பத்தினர் யாரிடமும் சரியாக பேசாமல் எதையோ யோசித்து கொண்டே இருந்ததை தந்தை மனோஜ் கவனித்து வந்துள்ளார். இது குறித்து ராகுலிடம் அவரது தந்தை மனோஜ் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை என சமாளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 7.00 மணி அளவில் வீட்டில் இருந்த ராகுல் விஷம் அருந்தியுள்ளார். வாயில் நுறை தள்ளிய நிலையில் கிடந்த ராகுலை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு ராகுலை அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் ராகுலின் தந்தை மனோஜ் தனது மகனின் மொபைல் போனை சோதனை செய்து பார்த்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராகுலின் நண்பனான ஜகில் என்பவர் ராகுலின் மொபைலை ஹேக் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ராகுலின் மொபைலில் தனது மூன்று சகோதரிகளின் புகைப்படங்களும் இருந்துள்ளது.
இதனை கவனித்த சகில் அந்த புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவை அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்களை ராகுலின் WhatsApp கிற்கு அனுப்பிய சாகில் தனக்கு ₹20,000 தர வேண்டும் இல்லையென்றால் இந்த புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் பரப்பி விடுவேன் என ஆடியோ காலிலும், வீடியோ காலிலும் மிரட்டி உள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியே வந்தால் தனது சகோதரிகளின் மானம் பறி போய்விடும் என்ற பயத்திலும், இந்த மிரட்டலுக்கு எப்படி சமாளிப்பது என்று தெரியாமலும், ராகுல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் ராகுல் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் என்ற முடிவிற்கு ராகுலின் தந்தை வந்துள்ளார். ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் புகாரளித்த ராகுலின் தந்தை தனது மகனை அவரது நண்பன் மிரட்டிய ஸ்கிரீன் ஷாட்டுகள் ஆடியோக்களை போலீசாரிடம் அளித்துள்ளார்.
மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு மைத்துணர் நீரஜ் என்பவரோடு குடும்பச் சண்டை ஏற்பட்டதாகவும் .அதனால் இந்த குற்றத்தில் அவரும் ஈடுபட்டிருக்கலாம் என ராகுலின் தாய் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து சாகில், நீரஜ் ஆகிய இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக புகைப்படங்களை நமக்கு விரும்பியவாறு மாற்றி அமைக்கும் வசதி ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வசதியை சில தவறான வழிகளில் பயன்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




