Home இந்தியா இந்தியாவின் மறைந்த இயற்கை சொர்க்கங்கள் – இன்னும் பலரால் கண்டறியப்படாத அதிசயங்கள்!

இந்தியாவின் மறைந்த இயற்கை சொர்க்கங்கள் – இன்னும் பலரால் கண்டறியப்படாத அதிசயங்கள்!

2
0

சுற்றுலாவுக்காகவும், அமைதியான ஓய்வுக்காகவும் வெளிநாட்டு இயற்கை இடங்களைத் தேடி செல்வது பல இந்தியர்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்தியாவே வெளிநாடுகளை மிஞ்சும் அளவுக்கு பல அற்புதமான இயற்கை சொர்க்கங்களை கொண்டுள்ளது என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அவற்றுள் சில, இன்னும் பலராலும் அறியப்படாத “அண்டர்ரேட்டட்” (Underrated) இயற்கை அதிசயங்களாகவே உள்ளன.

அந்த வகையில், 90% இந்தியர்களுக்கே தெரியாத சில இயற்கை அதிசயங்களை இப்போது பார்ப்போம்

குரேஸ் பள்ளத்தாக்கு – ஜம்மு & காஷ்மீரின் மறைந்த சொர்க்கம் :

இந்தியா–பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில், உயரமான இமயமலை பகுதியில் அமைந்துள்ளது குரேஸ் பள்ளத்தாக்கு. பனிமூடிய சிகரங்கள், பாய்ந்து ஓடும் ஆறுகள் மற்றும் டார்கிக் பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரம் ஆகியவை இதனை உண்மையான இயற்கை சொர்க்கமாக ஆக்குகின்றன.

கிஷஙங்கா நதி இந்த பள்ளத்தாக்கின் வழியாக பாய்கிறது. இங்குள்ள மரத்தாலான வீடுகள் மற்றும் பழங்கால இடிபாடுகள், பட்டு பாதையின் (Silk Route) வரலாற்றை மெல்லிசையாகச் சொல்லும் சாட்சிகளாக நிற்கின்றன.

இங்கு வசிக்கும் டார்க்ஷன் பழங்குடியின மக்கள் அன்பானவர்களாகவும், தங்களது மரபுகளை உறுதியாகப் பேணுபவர்களாகவும் உள்ளனர். இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்கில், இங்கு பெரிய அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லை. அதனால் சுற்றுலாப் பயணிகள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே குரேஸ் பள்ளத்தாக்கை இன்னும் பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாத ஒரு மர்மமான இடமாக வைத்திருக்கிறது.

செட்டிநாடு – பாரம்பரியம் பொங்கும் செழிப்பு நிலம் :

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள செட்டிநாடு, 19ஆம் நூற்றாண்டில் செட்டியார் வணிகக் குடும்பங்களால் கட்டப்பட்ட ஆடம்பரமான மாளிகைகளுக்குப் புகழ்பெற்றது. பெல்ஜியம் கண்ணாடி, பர்மிய தேக்கு மரம் மற்றும் இத்தாலிய பலிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மாளிகைகள், அவற்றைச் சுற்றியுள்ள தூசி நிறைந்த கிராமங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றன.

செட்டிநாடு அதன் காரமான நறுமண உணவுகளுக்கும், செழிப்பான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. அரண்மனை போன்ற வீடுகள், பாரம்பரிய விழாக்கள், மரபு கைவினைகள் ஆகியவற்றால் செட்டிநாடு தனித்துவம் பெறுகிறது. இத்தகைய சிறப்புகள் இருந்தபோதிலும், இது இன்னும் பெரும்பாலான இந்தியர்களால் முழுமையாகக் கண்டறியப்படாத இடமாகவே உள்ளது.

தர்கார்லி கடற்கரை – மறைந்த கடல் முத்து :

கோவாவின் கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை என்றாலும், மகாராஷ்டிராவின் கொங்கண் கடற்கரையில் உள்ள தர்கார்லி கடற்கரை அதே அளவு அழகானதும், ஆனால் இன்னும் பெரும்பாலோருக்குத் தெரியாததுமான ஒரு இடம்.

தர்கார்லியின் தெளிவான நீல நிற கடல் நீர், பவளப் பாறைகள், அமைதியான சூழல் ஆகியவை இதனை இந்தியாவின் சிறந்த ஸ்னார்கலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் இடமாக ஆக்குகின்றன.

சவுக்கு மரங்களால் சூழப்பட்ட கடற்கரைக்கு அருகே சத்திரபதி சிவாஜி கட்டிய சிந்துதூர் கோட்டை அமைந்துள்ளது — இது இப்பகுதியை வரலாற்று சிறப்புடன் இணைக்கிறது.

அருகிலுள்ள மீனவர்களின் ஹோம் ஸ்டேக்களில் தங்கி, நறுமணமிக்க மால்வாணி கடல் உணவுகளைச் சுவைப்பது இங்குள்ள பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

சோப்டா – பனிமூடிய புல்வெளியின் சொர்க்கம் :

உத்தராகண்டின் கார்வால் இமயமலையில் அமைந்துள்ள சோப்டா, உலகின் மிக உயரமான சிவன் கோயிலான துங்நாத் மற்றும் சந்திரசீலா சிகரம் மலையேற்றத்திற்கான தளமாகப் பயன்படுகிறது.

மனாலி போன்ற நெரிசலான மலைவாச இடங்களைக் காட்டிலும், சோப்டா அமைதியான, இயற்கை ஆர்வலர்களுக்கான மறைந்த சொர்க்கமாகும். தேவதாரு காடுகள், ரோடோடென்றான் பூக்கள், பனிமூடிய இமயமலை காட்சிகள் — இவை அனைத்தும் சேர்ந்து இதனை “இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து” என்று அழைக்க வைக்கின்றன.

குளிர்காலத்தில் சோப்டா பனிமூட்டத்தில் மூழ்கி, ஒரு கனவுலகத்தைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. தனிமையையும் சாகசத்தையும் விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தஞ்சம்.

தொலவீரா – மறைந்த ஹரப்பன் நாகரிக நகரம் :

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராண் ஆஃப் கச்ச் உப்பு சமவெளியில், முகஞ்சதாரோவின் கம்பீரத்திற்கு இணையாக நிற்கும் தொல்பொருள் தளம் — தொலவீரா.

5000 ஆண்டுகள் பழமையான இந்த ஹரப்பா நாகரிக நகரம்,அதிநவீன நீர் மேலாண்மை அமைப்புகள், படிக்கிணறுகள், மற்றும் பண்டைய நகர்ப்புற திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பிற பண்டைய இடிபாடுகள் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தாலும், தொலவீரா இன்னும் மிகக் குறைவான பார்வையாளர்களையே காண்கிறது.

இது இந்தியாவின் தொன்மையான நாகரிக மரபின் சிறந்த சாட்சியாக திகழ்கிறது. வெளிநாடுகளில் தேடப்படும் இயற்கை அதிசயங்களும் அழகிய சுற்றுலா இடங்களும், இந்தியாவிலேயே நிறைந்து கிடக்கின்றன. அவற்றை அறிந்து, பார்வையிடுவதன் மூலம் நம்முடைய நாட்டின் இயற்கை, வரலாறு மற்றும் கலாச்சார செல்வத்தை நாமே மறுபடியும் கண்டுபிடிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here