
ரயிலில் டிக்கெட்டுக்கு பதிலாக ஆதார் கார்டை கொடுத்த மூதாட்டியிடம் டிக்கெட் பரிசோதகர் பணிவுடன் நடந்து கொண்ட காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் மூதாட்டியிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கேட்டிருக்கிறார்.
அப்போது அந்த மூதாட்டி மிகவும் அப்பாவியாக தனது கைப்பையை திறந்து தன்னிடமிருந்த ஆதார் கார்டை எடுத்து டிக்கட் பரிசோதகரிடம் காண்பித்தார். பொதுவாகவே பெரும்பாலான டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் பயணிகளிடம் சிடு சிடுவென விழுவதைதான் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த டிக்கெட் பரிசோதகரோ அப்படி இல்லை. அந்த மூதாட்டியின் வெகுளித்தனத்தை புரிந்து கொண்டு நீங்கள் என்னிடம் கொடுத்திருப்பது உங்களது ஆதார் கார்ட் ஆனால் நான் ரயில் டிக்கெட்டை கேட்டேன். உங்களிடம் டிக்கட் இருக்கிறதா என மென்மையான முறையில் கேட்டார்.
இதை கேட்டதும் குளம்பிய அந்த மூதாட்டி என்னிடம் இதுதான் இருக்கிறது. என் மகன் இது மட்டுமே போதும் என கூறித்தான் என்னை ரயிலில் ஏற்றிவிட்டார் என பாவமாக கூறினார். இதை கேட்டதும் சட்டென சிரித்த டிக்கெட் பரிசோதகர் ஆதார் கார்டை மூதாட்டியிடமே கொடுத்துவிட்டு ரயிலில் பயணிக்கவும் அனுமதித்தார்.
தற்போது இந்த வீடியோதான் இணையவாசிகளின் ஹார்ட்(hearts) அள்ளி வருகிறது. இந்த காணொளி எப்போது எங்கு எடுக்கப்பட்டது? அந்த மூதாட்டி தனியாகத்தான் பயணம் செய்தாரா என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மூதாட்டியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகரை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.





