தலைமுடி ஏற்றுமதியில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாடு, அசாம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் (ED) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமுடி ஏற்றுமதி தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் மூன்று இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. தலைமுடி மற்றும் விக் தயாரிப்பு பொருட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தவறாகப் பயன்படுத்தி பண மோசடி நடந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின் படி, 11,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.இது தொடர்பாக, 2022ஆம் ஆண்டிலேயே அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
கோவில்களில் காணிக்கையாக வழங்கப்படும் தலைமுடியின் வணிகத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்தும் தற்போது சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பதி, பழனி, திருத்தணி, வேளாங்கண்ணி உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக தலைமுடி வழங்குகின்றனர். அந்த தலைமுடிகளை மொத்தமாக வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்தவர் வெங்கடேசன் எனும் தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நிறுவனங்களிலும் ,இல்லத்திலும் ,தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
உலகளவில் விக் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன் பொருட்களுக்கு அதிகமான தேவை காணப்படுவதால், இந்தத் துறையில் பெரிய அளவிலான பண மோசடி நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கம் என கூறப்படுகிறது.






