
ஒரு பெண் மருத்துவரின் எட்டு வருட போராட்டத்தின் விளைவாக, இந்தியாவில் உணவு பானங்களில் ORS (ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட்ஸ்) லேபில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி நிகழ்ந்தது? யார் அந்த நபர்? மற்றும் இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ORS என்பது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வெப்பநிலை உயர்வு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட போது, உடலுக்கு தேவையான நீர், உப்புகள் மற்றும் சர்க்கரை அளவை சமமாக வழங்கும் மிகவும் முக்கிய பானமாக அறியப்படுகிறது.
ஆனால் சமீப காலங்களில், இந்தியாவில் பல எனர்ஜி டிரிங்க்ஸ், சாக்லேட் பானங்கள் மற்றும் பழச்சாறுகளில் கூட ORS என்ற லேபில் பயன்படுத்தி, உண்மையில் வெறும் சர்க்கரை பானங்களை விற்பனை செய்துவந்துள்ளனர்.
இந்த பானங்களில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பெற்ற அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. அதிகப்படியான சர்க்கரை குறிப்பாக குழந்தைகளில் வயிற்றுப்போக்கு மற்றும் சிக்கல்களை மோசமாக்கும். இதனால், தவறாக ORS என்று விளம்பரப்படுத்தப்பட்ட பானங்களால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியது.
இதுதான் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷின் கவனத்தை ஈர்த்தது. மருத்துவர் சிவரஞ்சனி இதனை எதிர்த்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.
ஆரம்பத்தில், அவர் உணவு நிறுவனங்களுக்கு கடிதங்கள் எழுதி, சந்தேகங்களை தெரிவித்து, அரசுக்கு கோரிக்கை சமர்ப்பித்தார். பின்னர், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஊடகங்களின் மூலம் ORS பற்றிய விளக்கங்களை வழங்கினார். உண்மையான ORS பானங்கள் மட்டுமே ORS லேபில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். தவறான விளம்பரங்கள் குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து அறிவித்தார்.
இதன் விளைவாக, FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதில், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ORS பானங்களும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தர அளவுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பூர்த்தி செய்யாதவற்றை ORS என்று விளம்பரப்படுத்தி விற்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், இனி பெற்றோர்கள் அல்லது நோயாளிகள் ORS லேபில் குறிக்கப்பட்ட பொருளை வாங்கும் போது, உலகளாவிய சுகாதார தர அளவுகள் பூர்த்தி செய்யப்பட்ட சரியான ORS என்பதை உறுதி செய்யலாம்.
இந்த உத்தரவை வரவேற்று, மருத்துவர் சிவரஞ்சனி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு, இதை தனிப்பட்ட வெற்றியாகக் கருதவில்லை; மக்களின் வெற்றி என கூறியுள்ளார். ஒரு நபரின் கடுமையான முயற்சி சமூகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை, மருத்துவர் சிவரஞ்சனியின் வெற்றி நம் அனைவருக்கும் நிரூபித்துவிட்டது.





