
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பயணத்திட்டத்தின்படி நேற்று மதியம் 2.20 மணிக்கு புதுச்சேரியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வர வேண்டியிருந்தது. பின்னர் தனியார் ஹெலிகாப்டரில் மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து காரில் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும். விழா முடிந்து மீண்டும் மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் நாக்பூர் செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிதின் கட்கரி புதுச்சேரியிலிருந்து வருவதில் தாமதமானது. மதியம் 2.20 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்குத்தான் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து உடனடியாக தனிஹெலிகாப்டரில் மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலை வளாகத்திற்குச் சென்றார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
விழா முடிவதில் தாமதமானது. மீண்டும் தனியார் ஹெலிகாப்டரில் வருவதற்கு நேரம் அதிகமானது. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை ஹெலிகாப்டர் இயக்குநர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதாவது மாலை 6.00 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டர்கள் வானில் பறக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்காது என தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் காரில் புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் தனியார் விமானத்தில் நாக்பூர் புறப்பட்டார்.





