
செல்லப்பிராணியாக பூனையை வளர்ப்பது மிகவும் இனிமையான அனுபவம். பூனைகள் சுதந்திரமானவை, அன்பானவை, மேலும் குறும்புத்தனத்தால் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சியை தருபவை.
ஆனால் எல்லா பூனைகளையும் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. இந்தியாவில் ஒரு பூனை இனம் உள்ளது; இது மற்ற பூனைகளிலிருந்து தனித்துவமானது.
‘காரக்கல்’ எனப்படும் அந்த அரிய பூனை இனம் இந்தியாவின் சில பகுதிகளில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில இடங்களிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் காணப்படும் இது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில் வெறும் 50 அளவிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
மக்கள் எவ்வளவு முயன்றாலும், காரக்கல் பூனைகள் தங்களின் காட்டு இயல்பை மாற்றிக் கொள்ளாது. பதற்றம், ஆக்ரோஷம் மற்றும் அழிவூட்டும் செயல்களை வெளிப்படுத்தி, வளர்க்க முயற்சிப்பவரை தாக்கிவிடும். எனவே இதனை ஒருபோதும் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது.
சாதாரண பூனைகளை விட காரக்கல் பூனைகள் சற்று பலமுடையவை. வழக்கமான பூனை போல நினைத்து அவற்றை தொட முயன்றால், அவற்றின் கூர்மையான பற்கள் மற்றும் வலுவான தாடைகளால் கடித்து கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
இத்தகைய வலிமையான வேட்டையாடும் காட்டு விலங்கான காரக்கல் பூனையுடன் பழகுவது மிகவும் ஆபத்தானது. தனித்து வாழும் இயல்புடைய, இரவு நேர வேட்டையாடும் விலங்கான காரக்கல் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
சுமார் 3 மீட்டர் உயரம் வரை தாவி, பறவைகளை வானிலேயே பிடிக்கும் திறன் கொண்டது. இதனால் இதனை “பறக்கும் பூனை” எனவும் அழைக்கின்றனர்.
8 முதல் 20 கிலோ வரை எடையுடைய இதற்கு நீண்ட கால்கள், குறுகிய வால், மற்றும் நுனிக் காதுகளில் வளர்ந்திருக்கும் ரோமக் கற்றைகள் என்பவை தனித்துவமான தோற்றத்தை தருகின்றன.
அத்துடன், இதன் காதுகள் சிறிய ஒலிகளையும் துல்லியமாகக் கேட்க உதவுகின்றன. வழக்கமான பூனைகளைப் போல “மியாவ்” என இல்லாமல், இது கர்ஜனை மற்றும் சீற்றம் போன்ற ஒலிகளை எழுப்பும்.
பண்டைய எகிப்தியர்கள் காரக்கல் பூனையை வணங்கினார்கள். மம்மியாக செய்யப்பட்ட காரக்கல்கள் எகிப்திய சமாதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் Wildlife Protection Act, 1972 – இன் Schedule I யின் கீழ், இதனை செல்லப்பிராணியாக வளர்ப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.




