இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானத்தில் இன்று பயணம் மேற்கொண்டார். ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இந்த ரஃபேல் போர் விமானப் பயணம் நடைபெற்றது.
இதற்கு முன், 2023 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் அவர்கள் சுகோய்–30 போர் விமானத்தில் பயணம் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் திருமதி பிரதீபா பாட்டில் ஆகியோரும் தங்களது பதவிக் காலங்களில் சுகோய்–30 போர் விமானங்களில் பயணம் செய்திருந்தனர். அந்த காலத்தில் சுகோய்–30 போர் விமானமே இந்திய விமானப்படையின் வலிமையான போர் விமானமாகக் கருதப்பட்டது. குடியரசுத் தலைவர்கள் இப்படிப்பட்ட பயணங்கள் மூலம் விமானப்படை வீரர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பது வழக்கமாகும்.
இப்போது, உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரஃபேல் விமானத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பயணம் மேற்கொள்வது, இந்திய விமானப்படையின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. ரஃபேல் போர் விமானம் தற்போது இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ரஃபேல் போர் விமானம் இந்தியா மிகப்பெரிய அளவில் செயல்படுத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தான் நாட்டுக்குள் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்திய வான்படை பயன்படுத்திய முக்கியமான போர் விமானங்களில் ஒன்றாக ரஃபேல் திகழ்ந்தது. அந்த நடவடிக்கையில் இந்திய விமானப்படை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் அவர்கள் இப்போது பயணம் மேற்கொள்வது, அந்த நடவடிக்கையில் பங்குபற்றிய ராணுவ வீரர்களுக்கும் விமானப்படை வீரர்களுக்கும் பெரும் ஊக்கத்தைக் கொடுக்கக்கூடிய நிகழ்வாகும்.
இதனால், முன்னாள் குடியரசுத் தலைவர்களை விட, அதிநவீன ரஃபேல் போர் விமானத்தில் அதிவேகப் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவராக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் திகழ்வது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.






