இந்திய ராணுவத்திற்கு கூடுதல் வலுவூட்டும் வகையில் பைரவ் பட்டாலியன் படைகள் இணைய உள்ள சம்பவம் எதிரி நாடுகளை யோசிக்க வைத்துள்ளது.
சர்வதேச எல்லையில் இந்தியா செய்த நடவடிக்கைகளை பார்க்கலாம். ஜம்மு-காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவலைப்படுத்தியது. இந்த விவகாரத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்.
அடுத்தடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய விமானப்படைக்கு 600 பில்லியன் மதிப்பில் ஆறு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன்படி மூன்று ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா வழங்கியுள்ளது.
அதேபோல், தரைவழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்திய ராணுவ வீரர்களை கொண்டு செல்ல 212 கவச லாரிகளை வாங்க ஆக்சிஸ் கேட்ஸ் ஏரோஸ் போஸ் மற்றும் டெக்னா நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே சமயம், 62,000 கோடி ரூபாய் செலவில் 97 எல்சிஏ தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்திய ராணுவத்திற்கு ரூ. 659 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இவ்வாறு, சர்வதேச எல்லை மற்றும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை பலப்படுத்த, அதிரடி நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்திய ராணுவத்தில் புதிய உயரடக்கு படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக காலாட்படை இயக்குனர் ஜெனரல் அஜய் குமார் அறிவித்துள்ளார்.
சர்வதேச எல்லையில் சீனா, பாகிஸ்தான் உடனான திடீர் தாக்குதல்கள், ரோந்து பணிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, பைரவ் பட்டாலியன் என்ற புதிய படைப்பிரிவுகள் இந்திய ராணுவத்தில் இணைய உள்ளன.
இந்த பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு அடுத்த மாதம் மூன்றாம் தேதி ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது. இதேபோல், 25 பைரவ் படைப்பிரிவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் காலாட்படை, வீரங்கி படை, வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் பங்கேற்கும் என்று காலாட்படை இயக்குனர் ஜெனரல் அஜய் குமார் தெரிவித்தார்.






