பெங்களூருவில் குப்பை வீசுபவர்களுக்கு அதிகாரிகள் தற்போது வித்தியாசமான பாடம் கற்பித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் அனுதினமும் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு நேரடியாக வீட்டு வாசலுக்கே வந்து குப்பைகளை சேகரித்தாலும், தெருக்களில் குப்பை கொட்டுவது சிலருக்கு பழக்கமாக மாறிவிட்டது.
அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகைகள் இருந்தும் சிலர் கவனிக்கவில்லை. ஆனால் இந்த முறை அதிகாரிகள் புதுமையான வழியில் பாடம் கற்பிக்க முயற்சி எடுத்துள்ளனர்.
பெங்களூரு திடக் கழிவு மேலாண்மை லிமிடெட், அதாவது பிஎம்ஐஎல் என்னும் நிறுவனம் தெருக்களில் குப்பை கொட்டிவிட்டு செல்லும் குடியிருப்புகளை நேரடியாக அடையாளம் கண்டுள்ளது.
அவர்கள் குப்பை வீசும் வீடுகளை பட்டியலிட்டு, அவற்றின் முன்பாகவே அதே குப்பைகளை திரும்ப கொட்டியுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் “நீங்கள் வெளியே வீசும் குப்பை ஒரு நாள் உங்கள் முன் திரும்பி வரும்” என்ற வலுவான செய்தியை பொதுமக்களுக்கு அனுப்பியுள்ளனர்.
பெங்களூரு நகரம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த சிறப்பு நடவடிக்கைக்கு இலக்காகியுள்ளன. தெருக்களில் குப்பை கொட்டிய வீடுகளின் உரிமையாளர்கள் ஒரே நாளில் குப்பை நிறைந்த தங்கள் வீட்டு வாசலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நகரின் சுகாதார விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை தரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிஎம்ஐஎல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படி செய்தால்தான் மற்றவர்கள் குப்பை வீசுவதிலிருந்து திருந்துவார்கள் என்று கூறியுள்ளனர்.
இது ஒரு விதத்தில் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் முக்கியமான விழிப்புணர்வு முயற்சியாக மாறியுள்ளது. இத்தகைய முயற்சிகள் அடுத்த கட்டமாக அபராதம் மற்றும் வழக்கு பதிவு ஆக மாறும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை சரியான முறையில் வழங்குமாறு பெங்களூரு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.






