
ரோஹித் சர்மாவின் உடல் எடையைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் சிலர் அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மான தோற்றத்தில் தோன்றிய புகைப்படங்கள் வெளியானபோது, அது ரசிகர்களிடையே வைரலானது.
அதனைத் தொடர்ந்து, தற்போது முதல் முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் (ODI Rankings) முதலிடத்தை பிடித்திருப்பது ரோஹித் சர்மா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ரோஹித் சர்மா தனது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். ரன்கள் குவிக்கும் ஆட்டத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து, ஒருபோதும் பின் வாங்காத “ஹிட்மேன்” என்ற பெயரால் பிரபலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையும், சாம்பியன்ஸ் டிரோபியையும் இந்தியாவுக்கு வென்றுத் தந்தார். எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பு அவரது கேப்டன் பதவி இந்திய அணி நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.
18 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் களமிறங்கிய அவர், மொத்தம் 202 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்ந்தார்.
இந்த சாதனை அவரது தரவரிசை புள்ளிகளை பெரிதும் உயர்த்தியது. அதே தொடரில் முன்னாள் முதலிட வீரரான சுப்மன் கில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தரவரிசை விதிகளின்படி, ஒரு வீரர் தொடர்ந்து விளையாடாமல் இருந்தாலோ அல்லது மோசமாக செயல்பட்டாலோ அவரது புள்ளிகள் குறையும். சுப்மன் கில்லின் இந்த சரிவு ரோஹித் சர்மாவுக்கு முதலிடத்தை அடைய வாய்ப்பாக அமைந்தது.
ஐசிசி தரவரிசை மூன்று ஆண்டுகளில் வீரர்கள் அளிக்கும் ஆட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும். ரோஹித் சர்மா சில மாதங்கள் ஓய்வில் இருந்தபோதும், அவருடைய முந்தைய உயர்ந்த புள்ளிகள் செல்லுபடியாக இருந்தன. அதில் புதிய ரன்கள் சேர்வதால், தரவரிசையில் முன்னணியில் இருந்த வீரர்களை அவர் எளிதில் முந்தினார்.
தனது ஓய்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கப் பேட்டில் ரோஹித் சர்மா உறுதியான பதிலை அளித்துள்ளார். 38 வயதில் முதலிடத்தைப் பிடித்த அவர், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
38 ஆண்டுகள் 182 நாட்கள் வயதில் இந்த சாதனையை எட்டியதன் மூலம், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக வயதான பேட்ஸ்மேன் என்ற உலகச் சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





