
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடியபோது, கேட்ச் பிடித்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தின் தாக்கத்தால் அவரது மார்பு மற்றும் விலா எலும்பில் (rib bone) காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காயம் காரணமாக மார்பு பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மருத்துவர்கள் அவரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டுவருகின்றன என்றும் கூறப்படுகிறது.





