Home விளையாட்டு “இந்திய மகளிர் அணியின் வரலாற்று வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டு மழை!”

“இந்திய மகளிர் அணியின் வரலாற்று வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டு மழை!”

1
0

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது – வீராங்கனைகள் காட்டிய தன்னம்பிக்கை, திறமை மற்றும் ஒற்றுமை பாராட்டத்தக்கது. இந்த வெற்றி எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது – இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது பெருமைமிகு தருணம். அணியின் ஒற்றுமையும் குழு செயல்பாடும் சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது – 1983 உலகக் கோப்பை வெற்றி ஒரு தலைமுறைக்கு கனவுகளை காணச் செய்தது. இன்று நமது மகளிர் அணி அதே அளவுக்கு சிறப்பான சாதனையை செய்துள்ளது. பல இளம் பெண்களுக்கு பேட் எடுத்துப் பந்து விளையாடும் நம்பிக்கையை இந்த அணி அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரையிறுதி ஆட்டத்திற்கு முன் அளித்த பேட்டியில் ஷபாலி வர்மா கூறியிருந்தார் – இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. ஒரு சிறந்த செயலுக்காக கடவுள் தன்னை அனுப்பியுள்ளார் என்று நம்புகிறேன். அந்த ஆட்டத்தில் பிரகாசிக்கவில்லை என்றாலும், இறுதி ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 87 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்தார். மேலும் பந்துவீச்சிலும் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறந்து விளங்கிய அவர் ஆட்டநாயகி விருதை பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் ஷபாலி வர்மாவின் தன்னம்பிக்கை மற்றும் ஆட்ட திறமை குறித்து ரசிகர்கள் பாராட்டுத் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மகளிர் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி நாடு முழுவதும் பெருமை மற்றும் மகிழ்ச்சியை பரப்பியுள்ளது. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் புதிய யுகத்துக்கான தொடக்கமாகும். நமது வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here