50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற லீக் கட்டப் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வலுவான அணிகளிடம் தோல்வியடைந்திருந்தது. ஆனால் நியூசிலாந்தை வீழ்த்தி தட்டு தடுமாறியும் அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஏழு முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை, இந்திய மகளிர் அணி நவி மும்பையில் எதிர்கொண்டது. அண்மைக் காலங்களில் மூன்று பார்மட்டுகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஒரே அணி என்ற நம்பிக்கையில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். பீபி லிட்ஃபீல்ட் 119 ரன்கள், பெத் மூனி 86 ரன்கள், ஆஷ்லி கார்ட்னர் 65 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 338 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தனர்.
இன்னிங்ஸ் தொடக்கத்தில் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். ஆனால் 10 ரன்களில் ஷபாலி அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். மறுபுறம் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனாவை ‘வைட்’ என அறிவிக்கப்பட்ட பந்தை ஆஸ்திரேலியா முறையிட்டதில், மூன்றாவது நடுவர் அவுட் என தீர்ப்பளிக்க அதிர்ச்சியுடன் மந்தனா வெளியேறினார்.
அந்த தருணத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், மனம் தளராமல் ஜெமிமா ரொட்ரிக்ஸுடன் இணைந்து அணியை மீட்டார். இருவரும் அமைதியான ஆனால் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா ரன்கள் வேகமாக அதிகரித்தது.
ஜெமிமா சதம் அடித்தும் கொண்டாடாமல் அமைதியாக களத்தில் நின்றார் – வெற்றியே அவரது ஒரே இலக்கு. 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கௌர் அவுட் ஆனார். இருவரும் சேர்ந்து 167 ரன்கள் கூட்டிணைப்பு அமைத்தனர்.
அடுத்து வந்த தீப்தி சர்மா 17 பந்துகளில் 24 ரன்களும், ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர். மறுபுறம் ஜெமிமா தனது இன்னிங்ஸை திடமாகத் தொடர்ந்தார். கடைசியில் அமன்ஜோத் கௌர் இணைந்தார். இருவரும் இணைந்து ஒன்பது பந்துகள் மீதமிருக்கையில் இந்தியாவை வரலாற்று வெற்றிக்குச் சேர்த்தனர்.
134 பந்துகளில் 127 ரன்கள் எடுத்த ஜெமிமா ரொட்ரிக்ஸ் அவுட் ஆகாமல் இருந்தார். உலகக் கோப்பை நாக்அவுட் சேசிங்கில் சதமடித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
339 ரன்கள் சேசிங் என்பது உலகக் கோப்பை வரலாற்றில் – ஆண்கள் கிரிக்கெட்டில்கூட – நாக்அவுட் கட்டங்களில் நடக்காத சாதனையாகும். மேலும், மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 339 ரன்களை விரட்டி இந்தியா வரலாறு படைத்துள்ளது.
இதுவரை நடைபெற்ற 12 மகளிர் உலகக் கோப்பை தொடர்களில், ஏழு முறை ஆஸ்திரேலியாவும், நான்கு முறை இங்கிலாந்தும், ஒருமுறை நியூசிலாந்தும் கோப்பையை வென்றுள்ளன. இருமுறை இறுதியில் தோல்வியடைந்த இந்தியா, மூன்றாவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதே நவி மும்பையில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இது முதலாவது உலகக் கோப்பை வெற்றிக்கான வரலாற்று வாய்ப்பாகும்.






