
முதன்முறையாக ஒரு நாள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 298 ரன்கள் குவித்தது. இதில் ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சிலும் தீப்தி சர்மா மிளிர்ந்தார். அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை திணறச் செய்தார். 299 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா கேப்டன் ஓல்வார்ட் சத மடித்தும் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும், இறுதி ஆட்டத்தில் அதிரடி ஆடிய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதையும் வென்றனர். வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் அணியின் உலகக் கோப்பை வெற்றியை ஒட்டி நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, லக்னோ, பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் வீதிகளில் இறங்கி பட்டாசுகள் வெடித்து, கொடியேந்தி மகிழ்ந்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.






