Home விளையாட்டு ”பேசாமல் பதில் சொன்ன சாம்பியன் குகேஷ் – செஸ் உலகம் பாராட்டு”

”பேசாமல் பதில் சொன்ன சாம்பியன் குகேஷ் – செஸ் உலகம் பாராட்டு”

3
0

அமெரிக்காவின் செயின்ட் லூசில் நடைபெற்ற கிளட்சஸ் சாம்பியன் ஷோ டவுன் 2025 செஸ் தொடரில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் அமெரிக்காவின் திறமை வாய்ந்த கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவை விழ்த்தி தனது ஆட்டத்தின் மூலம் அமைதியாக பழிவாங்கி உள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் குகேஷ் ஆவார். தனது 18 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று உலகிலேயே இளம் வயதில் இந்த சாதனையை செய்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

இவர் தொடர்ந்து பல செஸ் போட்டிகளில் விளையாடிய நிலையில் தான் வெற்றி பெற்றாலும், சரி தோல்வி அடைந்தாலும் சரி, அமைதியாகவும் ,நிதானமாகவும், தான் செயல்படுவார்.

அத்துடன் எப்போது போட்டி முடிந்தவுடனும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தனது பலகையில் உள்ள அனைத்து காய்களையும் சரியாக அடுக்கி வைத்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு செக் மேட்: அமெரிக்கா வி. இந்தியா என்ற கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் நகமுரா குகேஷை வீழ்த்தினார். அதன் பிறகு வெற்றியை கொண்டாடும் விதமாக குகேஷின் ராஜாவை எடுத்து பார்வையாளர்களை நோக்கி வீசி எறிந்து தனது வெற்றியை கொண்டாடினார்.

இந்த செயல் செஸ் உலகில் பரவலாக விமர்சிக்கப்பட்டதுடன் மரியாதையற்ற செயல் என்றும் பலர் கண்டித்தனர். அன்று நடந்த அந்த சம்பவத்தினால் இந்த இரு வீரர்களுக்கு இடையிலான ராபிட் மினி போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் குகேஷ் தனது கடைசி சில நகர்வுகளால் நகமுராவை திணரடித்து வெற்றி பெற்றார். நகமுரா தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கையை நீட்டிய போது 19 வயதான குகேஷ் எந்தவித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் அமைதியாகவும், நிதானமாகவும், தானும் கை
குளிக்கினார்.

பின் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் உடனடியாக அவர் பலகையில் இருந்த அனைத்து காய்களையும் ஏன் நகமுராவின் ராஜா உட்பட அனைத்தையும் அமைதியாக மீண்டும் அடுக்கி வைத்தார். பின்னர் அவர் மேசையை விட்டு அமைதியாக வெளியேறினார்.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆட்டத்தின் கண்ணியத்தை மட்டுமே பிரதிபலிக்கும் குகேஷின் இந்த செயல் அவருடைய முதிர்ச்சியையும் சிறந்த விளையாட்டு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

குகேஷின் இந்த அமைதியான பதிலடி பேசாமல் ஆட்டத்தின் மூலம் பதில் சொல்வதே ஒரு சாம்பியனின் செயல் என்று செஸ் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here