
18 ஆண்டுகள் முடிந்து 19வது ஆண்டில் அடியெடுத்து வைத்தாலும், இன்னும் ஐபிஎல் தொடர் தனது மெருகை ஒரு சிறிதும் இழக்கவில்லை. இதனால், அது உலகின் மிகப்பெரிய T20 தொடராக திகழ்கிறது. அந்த ஐபிஎல் தொடரின் ஐகானாக கருதப்படுபவர் விராட் கோலி.
தோல்விகளை அஞ்சாமல், கடந்த 18 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார் கோலி. ஒரே ஒரு ஐபிஎல் கோப்பைக்காக அந்த அணி 18 ஆண்டுகளாக போராடி, இறுதியில் அதை வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து “கிங்” கோலி விலகலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது வீரர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க பெங்களூர் அணி முடிவு செய்துள்ளதுடன், அதற்காக விராட் கோலியையும் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம்.
இதனால், 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக கோலி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவர் அந்த முடிவை எடுத்தால், அது பெங்களூர் அணிக்கே அல்லாது முழு ஐபிஎல் தொடருக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





