
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதால் சென்னை தற்போது வெறிச்சோடியதாக காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்று நாட்களில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டுச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், தற்போது சென்னை மாநகரில் வழக்கமான பரபரப்பு காணாமல், சாலைகள் அமைதியாக உள்ளன. பிரதான சாலைகளில் மிகக் குறைந்த அளவிலான வாகனங்களே இயங்குகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களில் 4,860 சிறப்பு பேருந்துகள் மற்றும் வழக்கமான பேருந்துகள் மூலம் இதுவரை 6,15,992 பயணிகள் தங்களுடைய ஊர்களை நோக்கி பயணம் மேற்கொண்டிருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மொத்தம், அக்டோபர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,846 பேருந்துகளில் சுமார் 6.15 லட்சம் பேர் பயணம் செய்திருப்பது அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்களைப் பொறுத்தவரை, கோயம்புத்தூர், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் வழக்கமான சேவைகளுடன் இணைந்து இயக்கப்பட்டன.
தெற்கு ரயில்வே தரப்பில் கிடைத்த தகவலின்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.15 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஊர்களை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றனர்.
அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மட்டும் கடந்த மூன்று நாட்களில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சென்னை எக்ஸ்பிரஸ் நிலையங்கள் — எக்மோர் மற்றும் தாம்பரம் வழியாக சுமார் 1.7 லட்சம் பயணிகள், மேலும் சென்னை சென்ட்ரலிலிருந்து 2.7 லட்சம் பேர் தினசரி பயணம் மேற்கொண்டிருப்பதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2 லட்சம் பேர் அவற்றின் மூலம் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பதாக ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தவிர, தனிப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்கு சென்றுள்ளனர். சுங்கச்சாவடி தரவுகளின்படி, கடந்த சில நாட்களில் மட்டும் 1.5 லட்சம் வாகனங்கள் சென்னை வழியாக வெளியேறியுள்ளன.
இந்த நிலவரத்தைப் பொருத்தவரை, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குறைந்தபட்சம் 18 லட்சம் பேர் மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இதனால், தற்போது சென்னை மாநகரம் முழுவதும் வழக்கத்தை விட அமைதியாகவும் வாகன நெரிசல் குறைந்ததாகவும் காணப்படுகிறது.




