
கோவை கல்லூரி மாணவியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். துடியலூர் அருகே குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து விரைந்த காவல் துறையினர், மூவரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவர்களை சுற்றி வளைத்தபோது தலைமை காவலர் சந்திரசேகரை கத்தியால் காயப்படுத்திய நிலையில், மூவரும் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர்.
மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்த கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் நடந்தது. அதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (என்கிற காளீஸ்வரன்), சதீஷ் (என்கிற கருப்பசாமி), மற்றும் குணா (என்கிற தவசி) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீளமேடு விமான நிலையம் பின்புறம் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏழு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மாநகர எல்லை, மாவட்ட எல்லை என பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் சரித்திரப் பதிவுகளை ஆய்வு செய்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மூவரும் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியிலே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று இரவு சுமார் 10.00 முதல் 11.00 மணிவரை பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஞானசாய் சேகரன் தலைமையிலான குழுவினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் தலைமை காவலர் சந்திரசேகரை இடது மணிக்கட்டில் கத்தியால் காயப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை தொடர்ந்து பிடிக்க முயன்றபோது, மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் காலில் சுட்டு பிடித்துள்ளனர். சதீஷ் (கருப்பசாமி) மற்றும் கார்த்தி (காளீஸ்வரன்) ஆகியோருக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. குணா (தவசி) ஒருகாலில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பிடிக்கப்பட்ட மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமை காவலர் சந்திரசேகரரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவ இடம் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரடியாக ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
சிகிச்சைப் பெற்று வரும் குற்றவாளிகளை நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும் பணிகளும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே நடைபெற்று வருகின்றன.
இன்றே அவர்கள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின், நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




