Home தமிழகம் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில்

400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில்

1
0

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் எக்ஸ்செல் கல்வி நிறுவனம் கல்லூரிகளில் பயிலும் சுமார் 400 மாணவர்கள் வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமராபாளையத்தில் பிரபலமான எக்ஸ்செல் இன்ஜினியரிங் கல்லூரி, அதே கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் சுமார் 20,000 மாணவர்கள், அதிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று மதியம் சுமார் 2 மணியளவில், இங்குள்ள சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மாணவர் விடுதியில் செயல்படும் உணவகப் பகுதி (மெஸ்) மிகுந்த அசுத்த நிலையில் இருந்தது என்றும், சமையலறை சமைப்பதற்கே தகுதியற்ற நிலையிலிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் குடிக்கும் மேல்நிலைத் தொட்டி (ஓவர்ஹெட் டேங்க்) மிகவும் அசுத்தமாகவும், அதில் புழுக்கள் காணப்பட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த நிலைமையால், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலையை கருத்தில் கொண்டு, கல்லூரி நிர்வாகம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சார்பில் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இனி உணவு சமைப்பதற்கும், உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் 16ஆம் பிரிவு அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சில மாணவர்களுக்கு நேற்று குளுக்கோஸ் ,டிரிப் போடப்பட்டிருந்ததாகவும், அவர்களில் சிலருக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களை பார்த்துச் சென்றுள்ளனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களுக்கு பாட்டிலில் தண்ணீர் வழங்க வேண்டும்; தற்போது உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தாலும், கல்லூரி நிர்வாகம் அதை மீறி அந்த தொட்டியிலிருந்து தண்ணீர் வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சமையலறை கழிவுகள், கழிப்பிடக் கழிவுகள் ஆகியவை ஒன்றாக கலந்திருந்ததாகவும், இது தான் மாணவர்களின் உடல்நலப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது மாணவர்களின் உடல்நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி மாணவர்களின் பெற்றோர்களிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here