சென்னை ஆலந்தூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் கட்டிடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் மூலம் சுமார் 15 கிரவுண்ட் (ground) அளவுள்ள, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை பகுதியில், சர்வே எண் 146/2ல் உள்ள (சுமார் 15 கிரவுண்ட்) அரசு உடைமையாக இருந்தது. அந்த நிலம் குத்தகை அடிப்படையில் ஓட்டல் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குத்தகை காலம் முடிந்த பின்னரும், அந்த ஓட்டல் நிர்வாகம் அங்கு தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு ஆலந்தூர் உரிமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நேற்று வெளியான தீர்ப்பில் அந்த நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகாவின் உத்தரவின்படி, வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன், செந்தில் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் அதிகாலை நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுத்தனர்.
கொட்டும் மழையிலும் அவர்கள் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்களை வெளியேற்றி, பெயர்பலகைகள் மற்றும் ஹோட்டல் அடையாளங்களை அகற்றினர். பின்னர் முகப்பு கதவுகளை பூட்டி, கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
முக்கியமான ஜிஎஸ்டி சாலை, விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் ஆகிய முக்கிய பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






