தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) இந்த ஆண்டு 130 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் 20 புதிய வோல்வோ சொகுசு பேருந்துகளை சேவைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் சிவசங்கர் அண்மையில் பெங்களூருவில் உள்ள வோல்வோ பேருந்து உற்பத்தி நிலையத்துக்குச் சென்று, தமிழகத்திற்காக தயாராகி வரும் பேருந்துகளை பார்வையிட்டார். அதே நேரத்தில், வோல்வோ பேருந்துகளை இயக்கும் வகையில் பயிற்சி பெற்று வரும் தமிழக ஓட்டுநர்களையும் அவர் சந்தித்து ஊக்கமளித்தார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (SETC) மூலம் தலைநகரான சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு நீண்ட தூர சேவைகள் வழங்கப்படுகின்றன. இப்போது அறிமுகமாகவுள்ள வோல்வோ பேருந்துகள், தனியார் சொகுசு பயண வசதிகளுக்கு இணையான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வோல்வோ பேருந்துகள் வேகத் தடைகள், மேடு பள்ளங்கள், வளைவுகள் போன்ற சாலைத்தடங்களில் பயணிக்கும் போதும் அதிர்வு இல்லாமல் மென்மையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகின்றன. திடீர் பிரேக் அடிக்கும் சூழ்நிலையிலும் பயணிகள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்கும்படி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 20 வோல்வோ பேருந்துகள், இந்தாண்டு முடிவுக்குள் சாலையில் ஓடத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசு போக்குவரத்திலும் சொகுசு பயணத்தையும் ஒருங்கே அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.






