
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ரயில்வே பணிமனைக்கு நள்ளிரவில் பொலிரோ மேக்ஸ் சரக்கு வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பணிமனை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
கையில் ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களுடன் சென்ற அந்த நபர், பணிமனையில் நின்றிருந்த ரயிலின் அருகே சென்றுள்ளார். பின்னர் ரயிலில் இருந்த பேட்டரியை ஸ்பேனர் மூலம் கழற்றிய அவர், தாம் வந்த பொலிரோ மேக்ஸ் சரக்கு வாகனத்திலேயே புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் குற்றத்தடுப்பு நுண்ணறிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த வாகனத்தை பின்தொடர்ந்தனர்.
வாகனம் இறுதியாக திருவெள்ளைவாயல் பகுதியில் நின்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ரயிலின் பேட்டரியை திருடிய நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரது பெயர் நாகராஜ் என்பதும், வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு பொன்னேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ரயில் பெட்டியின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளை நாகராஜ் கடந்த ஒரு வருடமாக திருடி வந்ததும் தெரியவந்துள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எந்தவித தொந்தரவும் இருக்காது என்றும், அந்த நேரத்தில் திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
திருடிய பேட்டரிகள் எங்கே என ஆர்பிஎப் போலீசார் கேட்டபோது, அவற்றை பழைய இரும்புக் கடை ஒன்றில் கிலோக்கு ரூ.108க்கு விற்றுவிட்டதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த இரும்புக் கடைக்கு சென்று, ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலா 22 கிலோ எடை கொண்ட 134 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இரும்புக் கடையை நடத்தி வந்த சீனிவாசன், மணிமாறன் ஆகியோரும் தண்டையார்பேட்டை ஆர்பிஎப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மூவரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.





