
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே இருக்கக்கூடிய பிள்ளையார் நத்தம் பாரைப்பட்டி கோட்டைப்பட்டி சரலைப்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வந்து படித்து வருகின்றனர்.
இவர்கள் காலை மாலை நேரங்களில் பள்ளிக்கு சென்று வர ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் ஒரே பேருந்தில் அதிகளவு மாணவ மாணவிகள் செல்வதால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
பேருந்தில் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்கள் சிலர் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகவே உள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான மாணவ மாணவிகள் பேருந்துகளில் இருப்பதால் ஒரு சில பகுதிகளில் பேருந்தில் வந்து மாணவ மாணவிகள் ஏற்ற முடியாத நிலை உள்ளது
அவர்கள் கால்நடையாக பள்ளிக்கு செல்லும் நிலையும் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருநூப்பட்டி சாலையில் வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து தற்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த நத்தம் காவல்துறையினர் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்படாததால் போக்குவரத்து அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரே சாலை மறியல் போரட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.
போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலும் நடந்து வரும் நிலையில் தற்போது எந்த ஒரு போக்குவரத்து அதிகாரிகளும் மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இதுவரை வரவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.




