
சென்னை விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் மூன்று வயது குழந்தையின் கைவிரல் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்ல இருந்த இண்டிகோ (IndiGo) விமானத்தில் ஏறுவதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் இரண்டாம் தளத்திலிருந்து எஸ்கலேட்டர் மூலம் தரைத் தளத்துக்கு வந்தனர்.
அப்போது, மூன்று வயது பெண் குழந்தை பாவிகாவின் கைவிரல் எஸ்கலேட்டரில் சிக்கிக் கொண்டது. இதனால் விரல் நசுங்கி குழந்தை வலியால் கதறி அழுதது.
உடனடியாக எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டு, விமான நிலையத்தின் தனியார் மருத்துவ மையத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை சின்னையா ஆழ்வார் பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.




