
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டு அடுத்து துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சிலம்பரசன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தீபாவளி அன்று பிரியாவின் சகோதரர் கையில் பட்டாசு மற்றும் ஸ்வீட் பாக்ஸ்உடன் தனது சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.
வீட்டில் தட்டு நிறைய இட்லியை அம்பாரமாய் அடுக்கி அதில் மட்டன் குழம்பு ஊற்றி சாமிக்கு படையல் போட்டது போல அமர்ந்து சிலம்பரசன் சாப்பிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மச்சான் அக்கா எங்க என்று கேட்டபோது,சூடான சிலம்பரசன் உங்க வீட்டுக்கு வந்துருப்பான்னு நினைச்சேன் அங்க வரலையா அப்படின்னா உங்க அக்கா ஓடி போயிருப்பா என்று போதையில் ஆவேசமாக பேசி அவரை வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது தனது மனைவி பிரியா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருப்பதாக சிலம்பரசன் கூறியது தெரிய வந்தது. இதனால் பிரியா மாயமான விவகாரத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை உணர்ந்து கும்மிடி பூண்டி போலீசாரிடம் பிரியாவின் சகோதரர் புகார் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து தட்டு நிறைய இட்லியுடன் தீபாவளியை,
குடியும், கும்மாளமுமாய் கொண்டாடிய சிலம்பரசனை அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருமணமான நாளில் இருந்தே பிரியாவின் நடத்தை சம்பந்தமாக சந்தேகித்து அடித்து உதைப்பதை சிலம்பரசன் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல குக்கர் மூடிகால் தாக்கி காயப்படுத்தியதால் கோபித்து கொண்டு பிரியா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறிய பின்னர் அவரை சமாதானப்படுத்தி சிலம்பரசன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பிரியா வேறு யாருடனோ செல்போனில் பேசியதாக சந்தேகப்பட்டு சிலம்பரசன் தாக்கியதாகவும் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற அவர் பிரியாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த மனைவியின் உடலை ஒரு பிளாஸ்டிக் டிரமில் அடைத்து மறைத்து வைத்துள்ளார். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தனது மனைவி மீண்டும் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறிய சிலம்பரசன் இரு தினங்கள் கழித்து ட்ரம்முடன் மனைவி உடலை பைக்கில் எடுத்துச் சென்று ஏழுக்கண்பால அருகே குழிதோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதை எடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக கொல்லப்பட்ட மனைவியை புதைத்த இடத்தை போலீசாரிடம் சிலம்பரசன் அடையாளம் காட்டினார். அங்கு தடையவியல் நிபுணர்களை அழைத்துச் சென்று வருவாய் துறையினர் உதவியுடன் பிரியாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கொட்டும் மழையிலும் பந்தல் அமைத்து அந்த சடலத்தை உடற்கூறாய்வு செய்தனர். சகதி நிறைந்த அந்த பகுதியில் இருந்து டிராக்டரில் ஏற்றி சிலம்பரசரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சிலம்பரசனை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மனைவியை கொலை செய்ததை சிலம்பரசன் தாமாக ஒப்புக்கொள்ளவில்லை என்றால் போலீசாரால் எளிதில் கண்டுபிடித்திருக்க இயலாது என்றும் ஆவேசமாக பேசுவதாக நினைத்து கொண்டு போதையில் அவன் உளறியதால் இந்த கொலைச் சம்பவம் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.




