
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய தகவல் வெளிச்சம்! கோவை விமான நிலையம் பின்புறமாக, கல்லூரி மாணவியிடம் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இரவு 11 மணி அளவில் மாணவியை மூன்று இளைஞர்கள் தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுமார் 100 மீட்டர் தூரத்தில் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், அரைமணி நேரத்திற்குள் சுமார் 350 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள மோட்டார் அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு 11.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை, அந்த மூவர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் 3.30 மணி அளவில், தாங்கள் அணிந்திருந்த சட்டையை மாணவிக்கு கொடுத்து, அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல்களை பறித்து, “இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. யாராவது கேட்டால், தன்னை அடித்து நகைகளை பறித்துச் சென்றதாக மட்டும் கூறு” என மிரட்டி அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணீருடன் அவதி அடைந்த மாணவி, அங்கிருந்து நடந்து வந்து, தன்னை அழைத்து வந்த கார் நின்றிருந்த இடத்துக்கு வந்தபோது, அந்த கார் மற்றும் இளைஞர் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதே சமயம், மாணவியுடன் இருந்த நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர், மாணவியை தேடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மாணவியை அதிர்ச்சியூட்டும் நிலையில் கண்டபோது, உடனடியாக மீட்டு, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையில், சம்பவத்துக்குப் பிறகு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பிக்க முயன்ற மூன்று இளைஞர்களும், காவல்துறையினர் அந்த வாகனத்தை கைப்பற்றியதை அறிந்து, ஒரு நாள் முழுவதும் தலைமறைவாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிடைத்த முதற்கட்ட தகவல்களில், அந்த இளைஞர்கள் மாணவியின் தங்க நகையை பறித்தது, சம்பவத்தை “வழிப்பறி” போலத் தோற்றமளிக்கச் செய்வதற்காகவே என்றே கூறப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் குற்றத்தை மறைக்க முயன்றதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
ஏற்கனவே, இந்த மூவரும் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், இவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிலும், கோவை கிழக்கடவு பகுதியில் நடந்த மற்றொரு கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு, இந்த மூவரையும் காவல்துறை சுட்டுக்கொண்டு பிடித்த நிலையில், தற்போது அவர்கள் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதோடு, காவல்துறை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அவர்களில் சிலருக்கு நினைவு திரும்பிய நிலையில், ஆரம்பக் கட்ட விசாரணையில் சில தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்ட பிறகு, காவல்துறை அவர்களை காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்தும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த மூவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதால், மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




