
மதுரையில் சாலையின் நடுவே கிடந்த ஒரு சாக்கு மூட்டையில் கிட்டத்தட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வராணி என்ற பக்தை, தினமும் வழக்கம்போல் அருகிலுள்ள கோவிலுக்கு செல்லும் வழியில், இன்று காலை மதுரை வக்கீல் பொதுத்தெரு சந்திப்பு பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது சாலையின் நடுவில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதைக் கவனித்தார். அதை ஓரமாக தள்ளுவதற்காக காலால் எட்டி உதைத்தபோது, அதற்குள் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது போல் தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி உடனடியாக அருகில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் வந்து மூட்டையை திறந்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் நோட்டுகள் கிட்டத்தட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
செல்வராணி அந்த பணத்தை எந்த வித தயக்கமும் இல்லாமல் காவல்துறைக்கு ஒப்படைத்தார். அவரது நேர்மையான செயலை போலீசார் பாராட்டினர்.
இந்த பணம் ஹவாலா பணமா அல்லது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஒரு சாலையின் நடுவே கிடந்த பண மூட்டை காரணமாக மதுரையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.




