
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற அக்டோபர் 22ஆம் தேதி முதல் கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகிய சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியை சமப்படுத்தும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோவில் அருகிலிருந்து கடற்கரை வரை, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் மேடுகள் அகற்றப்பட்டு, பக்தர்கள் வசதியாக திரண்டு நிற்கும் வகையில் கடற்கரை சமனாக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா, முருகன் பக்தர்களின் மிகப் பெரிய ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்திலும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கும், சிறு வியாபாரிகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மணல் சமன்படுத்தப்படுகின்றன. சில நாட்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவுகிறது. பக்தர்கள் ஏற்கனவே முருகன் தரிசனத்திற்கும், சஷ்டி விரதத்திற்கும் திருச்செந்தூரை நோக்கி திரண்டுவரும் சூழல் நிலவுகிறது.




