
சென்னை மணலியில், உபரி நீர் செல்லும் கால்வாய் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைவில் சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
புழல், பூண்டி ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் மணலி சடையங்காடு வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று கடலில் கலக்கிறது.
இந்நிலையில், அந்த உபரிநீர் செல்லும் கால்வாயின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் புகும் நிலை உருவாகியுள்ளது. மழைக்காலம் என்பதால், ஏரிகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் வெளியேறும்போது, அந்த கால்வாயிலிருந்து பெருமளவு நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளது.
இதனைத் தடுக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், கால்வாய் கரையை பலப்படுத்துவதற்கான பணிகளை போர்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




