நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு மனம் கவரும் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுவுக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி தம்பதியினர் முத்துக்குமரன் மற்றும் லட்சுமி தங்கள் உழைப்பின் பலனாக ஒரு புதிய பைக் வாங்க முடிவு செய்துள்ளனர்.
தங்கள் விவசாய பணிகளுக்கும், வீட்டு தேவைகளுக்கும் பயன்படும் இருசக்கர வாகனம் வாங்கி கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பைக் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அது ஒரு சிறப்புமிக்க தருணமாக மாறியது. ஏனென்றால் பைக் வாங்க செல்லும்போது தாங்கள் பாசத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் கையோடு எடுத்துக்கொண்டு ஷோரூமுக்குள் நுழைந்தனர்.
அந்த காட்சி அங்கு இருந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ஷோரூமுக்குள் ஆட்டுக்குட்டியோட நுழைந்த தம்பதியை பார்த்து மக்கள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
சிலர் உடனே தங்கள் செல்போனில் அந்த காட்சியை பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயம், கால்நடை எங்கள் குடும்பம் எங்கள் உயிர் என்று சொல்லும் மாதிரியான ஒரு மனம் நெகிழ செய்யும் நிகழ்வாக இது மாறியுள்ளது.
ஆட்டுக்குட்டி என்பது விவசாயிகளின் வாழ்வில் ஒரு உறுப்பினராகவே கருதப்படுகிறது. அதனால்தான் பைக் வாங்கும் மகிழ்ச்சியிலும் அதை பங்கெடுக்க செய்துள்ளனர் என்று சொல்லலாம்.
மொத்தத்தில் தங்கள் உழைப்பின் பலனை தங்கள் செல்ல ஆட்டுக்குட்டியுடன் பகிர்ந்த நடுவக்குறிச்சி விவசாய தம்பதியின் செயல் அனைவரின் மனதையும் தொட்டுள்ளது.






