
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமப் பகுதிகளில் ஒன்றான பேச்சுப்பாறை பகுதியில் ஐந்து வீடு அருவி என்ற ஒரு அருவி உள்ளது. இப்பகுதி மிகப் பள்ளத்தாக்கானது. அங்கு செல்ல சாலை வசதி இல்லை; ஒட்டையடி பாதையில் கரடுமுரடான வழியாக மட்டுமே செல்ல முடிகிறது. அந்த ஐந்து வீடு பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடைவிதித்துள்ளது. கடந்த ஆண்டு இதே பகுதியில், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று மாலை (சுமார் ஆறு மணிக்கு), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 11 நண்பர்கள் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர். அவர்களில் நந்தகுமார் எனும் மருத்துவக் கல்லூரி மாணவர், அந்த நீர்வீழ்ச்சியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக மாயமானார்.
அவரது 10 நண்பர்கள் உடனடியாக கிராம மக்களிடம் உதவி கோரினர். தகவல் கிடைத்ததும், கொடைக்கானல் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அப்போது கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை பெய்ததால் நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; இதனால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று காலை முதல் மீண்டும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை மாணவனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக இருந்தும், சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதைத் தடுக்க காவல்துறை அல்லது வனத்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அருவியைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவனின் உடல் இதுவரை மீட்கப்படாததால், அந்தப் பகுதி முழுவதும் துயரமான சூழல் நிலவுகிறது.




