தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகிலுள்ள கிளியன் சட்டி மலையடிவாரப் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமியின் மகள் வர்ஷாஸ்ரீ, தந்தையுடன் இணைந்து மலையடிவாரத்தில் உள்ள வயலில் இருந்தபோது மண்ணில் பாதியாக புதைந்திருந்த ஒரு கல்லை தோண்டி எடுத்துள்ளார்.
அந்த கல் கூர்மையாகவும் வழவழப்பாகவும் இருந்ததை கவனித்த வர்ஷாஸ்ரீ, அதைத் தந்தையிடம் காட்டியுள்ளார். கல்லின் வடிவம் வித்தியாசமாக இருந்ததால், அவர்கள் அதை கடமலை குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான செல்வம் அவர்களிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.
பரிசோதித்துப் பார்த்த தொல்லியல் ஆர்வலர் செல்வம், “இந்த கல் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதமாக இருக்கலாம்,”என்று தெரிவித்துள்ளார்.
“நான் அப்பாவுடன் வயலில் இருந்தேன். மண்ணை தோண்டிக் கொண்டிருந்தபோது இந்த கல் கிடைத்தது. அது வித்தியாசமாகவும் அழகான கோடுகளுடன் இருந்தது. கையில் பிடிக்கும்போது மிகவும் கூர்மையாக இருந்தது,” என்றார்.
இந்த பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால், பல பழங்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள் கிடைக்கக்கூடும். இங்கு புதிய கற்காலத்தில் கல் கருவிகள் தயாரிக்கப்பட்ட தொழில்சாலை இருந்திருக்கலாம் என்றும் சொல்லலாம். அத்தகைய கருவிகளைப் பயன்படுத்தி அக்கால மக்கள் வேட்டையாடல், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். அதற்கான சான்றுகள் இப்பகுதியில் நிறைய உள்ளன, என்றார்.
மேலும், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் ஆகிய நான்கு காலங்களுக்கு சேர்ந்த கல் கருவிகள், விலங்குகளின் எலும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை இப்பகுதியில் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு இந்தப் பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






