
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெறவுள்ள நிலையில், கோவில் முகப்பை அலங்கரிக்க இரண்டு டன் மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு தோரணங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அதுமட்டுமில்லாமல் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சிறப்பு வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும், கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கந்த சஷ்டி நாளில் ஆறு நாட்கள் கோவிலில் விரதம் இருந்து சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டிற்கான சூரசம்கார கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
நாளை விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கோவில் முன்புள்ள கடற்கரையில் மாலை 4:30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 4000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவிலை சுற்றி 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் இரண்டு ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோவிலின் முன்பக்க வாயிலில் சிறப்பு தோரணம் கட்டுவதற்காக மலர்கள் கொண்டு தோரணங்கள் கட்டும் பணிகள் கோவில் சண்முக விலாச மண்டபத்திற்குள் தொடங்கியது. செவ்வந்தி, சம்பங்கி, கிரேந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் இரண்டு டன் எடை கொண்ட மலர்கள் கொண்டு தோரணம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அன்னாசி பழம், ஆரஞ்சு பழம், கரும்பு மற்றும் சோழக்கதிர்கள் கொண்டு சிறப்பு தோரண அலங்காரம் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியூர் பகுதிகளில்லிருந்து வரும் வாகனங்கள் தனி நபர் வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




