
சென்னை நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய ரயில் முனையம் — சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். வட மாநிலங்கள் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களின் நுழைவாயிலாக இது திகழ்கிறது. தென்னிந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகிய இந்த நிலையம், தினமும் லட்சக்கணக்கான பயணிகளை வரவேற்று அனுப்பி வைக்கிறது.
இங்கு புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் என இரண்டு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேசமயம், சில ரயில்கள் தாமதமாக இயங்குவதால் பலர் நடைமேடைகளில் தங்கியிருந்து தூங்குவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வந்து, இரவு நேரங்களில் நிலையத்திலேயே தங்குவது அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, ரயிலில் ஏறவிருப்பவர்களை வழியனுப்பும் நபர்கள் நடைமேடை டிக்கெட் (Platform Ticket) எடுத்து உள்ளே செல்லுவது கட்டாயம். ஆனால், சிலர் இந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் நிலையத்திற்குள் தங்கி இருப்பதும், உறங்குவதும் வழக்கமாகியுள்ளது. இதனால் பயணிகள் தங்களின் ரயில்களை பிடிக்கச் செல்லும் போது இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, நடைமேடை டிக்கெட் எடுத்திருந்தாலும், நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் தங்கினால் அல்லது உறங்கினால் அபராதம் விதிக்கப்படும்.
ரயில் நிலையத்தின் உள்ளே தங்க அனுமதி, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கே வழங்கப்படும்.அதாவது, நடைமேடை டிக்கெட் என்பது குறுகிய நேரத்திற்கு மட்டும் நிலையத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கும் ஒன்றாகும்; அதைப் பயன்படுத்தி நீண்ட நேரம் தங்குவது விதிமுறைகளை மீறுவதாகும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.




