
தலைநகர் சென்னையின் நிரந்தர அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் 27 மாடிகளை கொண்ட சென்ட்ரல் டவரின் 30% கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் அடையாளமாக பல இடங்கள் திகழ்ந்து வருகிறது. தொழில், கலை, விளையாட்டு என பற்பல துறைகளுக்கு தலைநகராக திகழும் சென்னை தொழில் துறையில் முதன்மை நகரமாக திகழ்கிறது. அந்த வகையில் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான இடம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தினமும் பல லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில் சென்ட்ரலை சுற்றி போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். சென்னை சென்ட்ரல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் வாகனங்களை நிறுத்துவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன.
மேலும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிரே 27 மாடிகளை கொண்ட சென்ட்ரல் டவர் என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டுவதற்கான பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்றவற்றை இணைக்க ஒரே சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளது.
பிரம்மாண்டமாக கட்டமைக்கப்படும் சென்ட்ரல் டவர் பிளாசா என்பது பயணிகளுக்கு மல்டி மாடல் பயணத்தை எளிதாக்கும் விதமாக கட்டப்படுகிறது. அதாவது மெட்ரோ பயணிகள் ரயில் பேருந்து இடையே எளிதாக மாறும் விதமாக இந்த கட்டடம் கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது அங்கே பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள சென்ட்ரல் டவர் பிளாசாவில் 1650 பைக்குகள் மற்றும் 600 கார்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய மல்டி லெவல் அண்டர் கிரவுண்ட் வாகனம் நிறுத்துமிடம் தயாராக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 33 அடுக்கு கட்டிடம் கட்டவே திட்டமிடப்பட்டது. பின்னர் அது 31 அடுக்கு கட்டிடத்துடன் இரட்டை கோபுரமாக மாற்றப்பட்டது.
தற்போது பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு வடிவமைப்பு 27 மாடிகளாக குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் உள்ளே ஹோட்டல்கள், கடைகள், பொருளாதார மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இடம் பெற்றிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று வரும் நிலையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள் திட்டங்கள் வெளியிடப்பட்டன.
தற்போதுவரை இந்த சென்ட்ரல் டவரின் 30% கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டட் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பிரம்மாண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தலைநகர் சென்னையின் மற்றொரு அடையாளமாக இந்த சென்ட்ரல் டவர் பிளாசா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




