
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்கியுள்ளது. இந்த பணியை எல்காட் (ELCOT) நிறுவனம் ஒருங்கிணைக்கிறது.
தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கையடக்கக் கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர் உலகளாவிய டெண்டர் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் டெண்டர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஹெச்பி (HP), டெல் (Dell), மற்றும் ஏசர் (Acer) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவுள்ளன. குறைந்த காலத்துக்குள் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதால், பணியினை மூன்று நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கியுள்ளனர்.
மிகவும் முக்கியமாக, எந்தவித இடைத்தரகர் செயல்பாடுகளும் இல்லாமல், நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு அரசு மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய உள்ளது.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடிக்கணினிகளின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை பரிசீலித்து இறுதி செய்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் மடிக்கணினி உற்பத்திப் பணிகளை உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், அனைத்து 10 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான துவக்க நாள் மற்றும் விநியோக முறை குறித்து தீர்மானிக்க, அடுத்த வாரம் துணை முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தில் திட்டத்தின் துவக்க தேதி மற்றும் வழங்கும் நடைமுறை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




