தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, உத்தமபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக முல்லைப்பெரியாற்றில் சுமார் 10,000 கனஅடி நீர் வெளியேறி வெள்ளப்பெருக்காக ஓடியது.
இந்த வெள்ளநீர் உத்தமபாளையம் அருகிலுள்ள உத்திரா கோவில் பகுதிக்குள் நுழைந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் நீர் புகுந்தது. நள்ளிரவு நேரத்தில் திடீரென தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் தங்களது பொருட்களை பாதுகாத்து, தங்களது உயிரை காப்பாற்றும் பொருட்டு குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.
அதிகாலை நேரத்திலும் வெள்ளநீர் வேகமாக பெருகி, பல வீடுகளுக்குள் நான்கு அடிவரை தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அருகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெள்ளநீரை அகற்றுவதற்கான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






