Home தமிழகம் தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உற்சாகம், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உற்சாகம், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

1
0

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் சிலைக்கு, ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதன் மைய நிகழ்வுகள் நடைபெறவுள்ள முக்கிய இடமாக மதுரையில் உள்ள கோரிப்பாளையம் பகுதி திகழ்கிறது.

அங்குள்ள முழு உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான மக்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், நாளை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையொட்டி, கோரிப்பாளையம் பகுதி முழுவதும் காவல் துறையினர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். சிம்மக்கல்லிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லும் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாகனங்கள் மாற்று பாதைகளில் அனுப்பப்படுகின்றன.

சுமார் 5 அடி உயர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பால்குடம் ஏந்தி, மலர்கள் தூவி, மாலை அணிந்து மரியாதை செலுத்தும் பொதுமக்கள் வரிசையாக செல்லும் வகையில் வழிநடத்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரையும் சோதனை செய்து பின்னரே அனுமதி வழங்குகின்றனர்.

நேற்று மாலை முதலாகவே மதுரை மக்கள் தொடர்ந்து சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், காவல்துறை ட்ரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.

மேலும், ஒளிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பால்குடம் ஏந்தி படிகளில் ஏறிச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

நாளை காலை தமிழக முதல்வர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மரியாதை செலுத்தவுள்ள நிலையில், கோரிப்பாளையம் பகுதி முழுவதும் காவல் துறையின் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

மொத்தத்தில், 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் நுழைவாயில்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here