தீப ஒளி திருநாள் தீபாவளி வரும் இந்த மாதம் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறது.
பொதுவாக தீபாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 20,000 சிறப்பு பேருந்துகள், அதேபோல் ரயில்வே சார்பில் 108 சிறப்பு ரயில்கள் இயக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடிய பிறகு, செவ்வாய்க்கிழமை அனைவரும் ஒரே நேரத்தில் ஊர் திரும்பினால் பெரும் நெரிசல் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கும் நோக்கில், அரசு 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கலாம் என்ற ஆலோசனை தற்போது பரிசீலனையில் உள்ளது.
முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும்.
ஆனால் அந்த கூடுதல் விடுமுறைக்கு பதிலாக, அரசு ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த வாரத்திலேயே வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்; இல்லையெனில் சட்டமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
மொத்தத்தில், தீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை வழங்கி, ஊருக்கு சென்ற மக்கள் திரும்பும் போதே நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.






