
இருப்போருக்கு அது தீபாவளி. இல்லாதவர்களுக்கு அந்த நாள் தலைவலி. எதற்கு இந்த ஏற்ற தாழ்வு என தீபாவளியே கொண்டாடாமல் தவிர்க்கின்றனர். சிவகங்கை அருகே உள்ள எட்டுப்பட்டி ராசாக்களும் ராசாத்திகளும்.
ஏற்ற தாழ்வுகளை போக்கி கிராம மக்கள் அனைவரும் சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே இந்த முடிவுக்கு அடிப்படை. ஒப்பிலான்பட்டி, எஸ் மாம்பட்டி, தும்பைப்பட்டி, வளையப்பட்டி, இடையப்பட்டி உள்ளிட்ட எட்டு பட்டி மக்கள் மூன்று தலைமுறைகளாக தீபாவளியை தவிர்க்கின்றனர்.
விவசாய காலங்களில் பொருளாதார சிரமங்கள் காரணமாக சிலர் தீபாவளி கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டபோது இந்த சமத்துவ முடிவை ஊர் பெரியவர்கள் எடுத்தனர். தீபாவளி பண்டிகை அன்று தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதையோ, பலகாரங்கள் தயாரிப்பதையோ, பட்டாசு வெடிப்பதையோ, புத்தாடை அணிவதையோ இந்த கிராம மக்கள் அறவே தவிர்த்து விடுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடும் வேளையில் இந்த எட்டு கிராமங்கள் மட்டும் அமைதியில் ஆழ்ந்திருக்கும். வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் இளைய தலைமுறையினர் கூட இந்த கிராமங்களின் நடைமுறையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவதில்லை என்று கிராம மக்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
முன்னோர்களின் வாக்குகளை காப்பாற்ற இந்த நடைமுறை இப்போதல்ல. இனிவரும் தலைமுறைகளிலும் கடைபிடிக்க போவதாக இந்த கிராம மக்கள் உறுதி அளிக்கின்றனர். மனிதநேயங்கள் அழிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் இந்த செயல் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.




