
திருநெல்வேலி அருகே திடியூரில் உள்ள பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் எட்டு மாணவர்களுக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரத் துறை அவசர நடவடிக்கை எடுத்து கல்லூரியை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலடியூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்என் கல்விக் குழுமத்தின் வளாகத்துக்குள் ஐந்து கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலர், படித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு மாணவர் காய்ச்சல் அறிகுறியுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்யச் சென்றபோது, எலி காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில், கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தாமிரபரணி – நம்பியார் – கருமேனியார் இணைப்பு திட்டத்தின் வெள்ளநீர் கால்வாயிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு இன்றி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனால் தான் எலி காய்ச்சல் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், மொத்தம் எட்டு மாணவர்களுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளனர்.
இன்னும் தண்ணீர் மாசுபட்டிருப்பதால், சுகாதாரத்துறை கல்லூரியை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, பரிசோதனையில் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பிறகே கல்லூரி மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாமிரபரணி நம்பியார் கருமேனியார் இணைப்பு திட்டத்தில் உள்ள கால்வாயை ஆக்கிரமித்து கல்லூரி தண்ணீர் எடுத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை, கல்லூரி மெஸ் மற்றும் சமையல் கூடங்களின் அங்கீகாரங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.




