
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குளியல் அறையில் மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே செந்தலபடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவரது மகள் சந்தியாவிற்கு, பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமஞ்சேரிப்பேட்டை சேர்ந்த ராமு என்பவரின் மகன் மணியுடன் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்தது.
இதற்காக மணப்பெண் மற்றும் பெண் சார்ந்த உறவினர்கள் நேற்று மாப்பிள்ளை வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சந்தியா குளிக்க குளியல் அறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் கதவைத் தட்டியபோது பதில் வரவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சந்தியா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டனர்.
உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பெண் மாப்பிள்ளை வீட்டில் குளியல் அறையில் மரணமடைந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




