கரூர் பெருந்துயர் வழக்கில் சிறப்பு விசாரணை குழு மற்றும் தனிநபர் ஆணை விசாரணையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ராக்கு தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் ,சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. கே மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோரின் அடங்கிய அமர்வின் முன்பு நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவருக்கு உதவியாக சில அதிகாரிகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜிரஸ்டோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும் இந்த கண்காணிப்பு குழுவில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கரூர் விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணை மற்றும் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.






